மராட்டியம்: சிறுவனிடம் வழி கேட்ட சாமியார்களுக்கு அடி, உதை; கிராமவாசிகள் ஆவேசம்
மராட்டியத்தில் பிள்ளை பிடிக்க வந்தவர்கள் என தவறுதலாக எண்ணி 4 சாமியார்களை கிராமவாசிகள் அடித்து, தாக்கியுள்ளனர்.
சங்கிலி,
உத்தர பிரதேச மாநிலத்தில் மதுரா நகரை சேர்ந்த சாமியார்கள் 4 பேர் ஒவ்வொரு ஊராக புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி அவர்கள் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு சென்று சாமி தரிசனம் செய்து உள்ளனர். இதன்பின்பு, சோலாப்பூரில் சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர்.
அவர்கள், மராட்டியத்தின் சங்கிலி மாவட்டத்திற்கு வந்தபோது, வழி தெரியாமல் இருந்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவனிடம் சென்று உதவி கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் பிள்ளை பிடிக்க வந்தவர்கள் என தவறுதலாக எண்ணிய கிராமவாசிகள் ஒன்றாக திரண்டு, சாமியார்களை கம்புகளால் அடித்து, உதைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதுபற்றிய வீடியோ வெளிவந்ததும் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், எங்களுக்கு எந்தவொரு புகாரும் வரவில்லை. ஆனால், உண்மை தன்மையை ஆய்வு செய்து வருகிறோம் என சங்கிலி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தீட்சித் கெடான் கூறியுள்ளார்.