மணிப்பூர் வன்முறை: பாஜக ஆதரவு குக்கி எம்.எல்.ஏ.க்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாஜக ஆதரவு குக்கி இன எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Update: 2023-08-17 07:36 GMT

புதுடெல்லி,

மணிப்பூரில் மெய்தி - குக்கி இனத்தவர் இடையே நடந்த மோதலில் 160-க்கு மேற்பட்டோர் பலியாகினர். இந்த கலவரம் இன்னும் ஓயவில்லை. மாறாக அங்கு நடந்துள்ள கொடூர செயல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் வெளியாகி நாட்டையே உலுக்கி வருகின்றன. இதில் முக்கியமாக 2 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு சென்ற வீடியோ பதிவுகள் மக்களை பதற வைத்துள்ளன.

மணிப்பூர் விவகாரத்தை தீவிரமாக எடுத்த எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் அறிக்கை கேட்டு நாடாளுமன்றத்தை முடக்கின. இதையடுத்து மணிப்பூர் பாலியல் வன்முறை வழக்கை விசாரிக்க 53 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை சிபிஐ அமைத்துள்ளது.

இந்த நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாஜக ஆதரவு குக்கி இன எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மணிப்பூரில் குக்கி மக்கள் வாழும் 5 மாவட்டங்களில் தலைமைச் செயலாளர், டிஜிபி பதவியை உருவாக்க கோரி கடிதம் எழுதியுள்ளனர். மேலும் மணிப்பூரில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.500 கோடி வழங்க வேண்டும் என்றும் குக்கி பழங்குடியின அமைப்புகளுக்கு மணிப்பூரில் தனி நிர்வாகம் அமைக்க வேண்டும் என கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்