பிரதமர் நினைத்தால் இரண்டே நாட்களில் மணிப்பூர் பிரச்சினையை தீர்க்க முடியும் - ராகுல் காந்தி

பிரதமர் மோடி நினைத்தால் இரண்டே நாட்களில் மணிப்பூர் பிரச்சினையை தீர்க்க முடியும், ஆனால் அவர் அதை விரும்பவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

Update: 2023-08-10 04:24 GMT

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கு காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.இந்த நிலையில் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கும் விதமாக உலக பழங்குடியினர் தினத்தையொட்டி ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் மணிப்பூர் விவகாரத்தை குறிப்பிட்டு பா.ஜ.க. அரசை கடுமையாக சாடினார். பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:- பா.ஜ.க.வின் சித்தாந்தம் மணிப்பூரை கொளுத்திவிட்டது. அந்த தீ 3 மாதங்களுக்கும் மேலாக எரிகிறது. மக்கள் கொல்லப்படுகிறார்கள், குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்.

மணிப்பூரில் எரியும் தீயை அணைக்க பிரதமர் விரும்பினால் இந்திய ராணுவத்தின் மூலம் 2 அல்லது 3 நாட்களில் அதை செய்துவிட முடியும். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. மாறாக தீயை எரிய வைக்க விரும்புகிறார்.மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு நானும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் சென்றோம். ஆனால் வன்முறை வெடித்ததில் இருந்து பிரதமர் அந்த மாநிலத்திற்கு செல்லவில்லை.

நாட்டின் நிலம் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது. அவர்கள்தான் அதன் அசல் உரிமையாளர்கள்.பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.-ம் நீங்கள் காட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். உங்கள் பிள்ளைகள் என்ஜினீயர்களாகவோ, டாக்டர்களாகவோ, வக்கீல்களாகவோ, தொழிலதிபர்களாகவோ ஆகக்கூடாது என்பது அவர்களின் எண்ணம். உங்கள் உரிமைகளையும், நிலத்தையும் பறிக்க விரும்புகிறார்கள்.  ஆனால் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பெறவும், அவர்களின் கனவுகள் நிறைவேறவும் காங்கிரஸ் விரும்புகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்