மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ. வசம் ஒப்படைப்பு; கர்நாடக அரசு அறிவிப்பு

மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. வசம் ஒப்படைத்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-11-24 18:45 GMT

பெங்களூரு:

குக்கர் குண்டு

மங்களூருவில் கடந்த 19-ந் தேதி ஓடும் ஆட்டோவில் திடீரென குக்கர் குண்டு வெடித்தது. இதில் அந்த ஆட்டோ டிரைவர் மற்றும் குக்கர் குண்டுடன் பயணித்த பயங்கரவாதி ஷாரிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அந்த 2 பேரும் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 45 சதவீதம் அளவுக்கு தீக்காயம் அடைந்துள்ள பயங்கரவாதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த பயங்கரவாத செயல் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த பயங்கரவாதியின் சதித்திட்டம் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

உபா சட்டம்

இந்த நிலையில் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து உபா சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு கோரி தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) கர்நாடக அரசு ஒப்படைத்துள்ளது. இதுகுறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மங்களூரு கங்கனாடி அருகே சமீபத்தில் குக்கர் குண்டு வெடித்தது. இதுகுறித்து கர்நாடக போலீசார் முதல்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். இதில் கிடைத்த தகவல்கள், ஆதாரங்கள், பிற விவரங்கள் அடிப்படையில் இந்த வழக்கை உபா சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துமாறு என்.ஐ.ஏ.வுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.

இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்