யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடாக தேர்ச்சியா? ஓம்பிர்லா மகள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு

சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா தற்போது ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்.

Update: 2024-07-23 13:05 GMT

புதுடெல்லி,

மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2 ஆவது முறையாக பாஜக எம்.பி ஓம் பிர்லா தேர்வாகியுள்ளார். 39 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டு முறை மக்களவை சபாநாயகர் ஆன பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார். சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த அஞ்சலி பிர்லா தனது தந்தையின் செல்வாக்கினால் தேர்வு எழுதாமலேயே ஐ.ஏ.எஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம் சாட்டினர். இது நெட்டிசன்கள் இடையே பேசுபொருளாகவும் மாறியது. ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளை அஞ்சலி பிர்லா திட்டவட்டமாக மறுத்தார்.

தன் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்று நோக்கத்தில் தான் இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அஞ்சலி பிர்லா தெரிவித்தார். இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பும் இத்தகைய சமூக வலைத்தள பதிவுகளை நீக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் அஞ்சலி பிர்லா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெல்லி ஐகோர்ட்டில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், ' யுபிஎஸ்சி தேர்வில் நான் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு எனக்கும், எனது தந்தையின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாக பல்வேறு பதிவுகள் வெளியாகியுள்ளது, அதனை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க அஞ்சலி பிர்லா தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட டெல்லி ஐகோர்ட்டு, சமுக வலைத்தளங்களில் அஞ்சலி பிர்லா குறித்து வெளியிடப்பட்டுள்ள அவதூறு பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்