டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட துணைநிலை கவர்னர்
டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, துணைநிலை கவர்னர் வினய்குமார் சக்சேனா பார்வையிட்டார்.;
புதுடெல்லி,
யமுனை நதியில் நீர்வரத்து குறைந்தாலும், டெல்லியில் இன்னும் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்தது. அரியானாவில் தடுப்பணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டதால் டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
3 நாட்களுக்குப் பின் யமுனையில் நீர்வரத்து குறைந்து, இன்று காலை நீர்மட்டம் 205.95 மீட்டராக உள்ளது. நேற்று மாலை டெல்லியில் மீண்டும் மழை பெய்த நிலையில், இன்றும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. யமுனையில் நீர்வரத்து குறைந்தாலும், நகரின் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. அரியானா பா.ஜ.க. அரசு, ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிகப்படியான நீரை டெல்லிக்கு மட்டும் திறந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இதனிடையே, டெல்லியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து துணைநிலை கவர்னர் வினய்குமார் சக்சேனாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, துணைநிலை கவர்னர் வினய்குமார் சக்சேனா பார்வையிட்டார். காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட் பகுதியில், சாலைகளை வெள்ளம் சூழந்ததை அடுத்து, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனை கவர்னர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மறுசீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பணிகளை விரைந்து முடிக்க ஆளுநர் அறிவுறுத்தினார்.