திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாடியது. அதைப் பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.;

Update:2023-03-17 03:42 IST

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களிலும், நடந்து பாத யாத்திரையாக வந்தும் சாமி தரிசனம் செய்து விட்டுச் செல்கின்றனர். ஏழு மலைகளும் அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் அதில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

வனப்பகுதியில் இருந்து விலங்குகள் அடிக்கடி வழி தவறி மலைப்பாதைகளுக்கும், கோவில் அருகிலும் வந்து விடுகின்றன. அதேபோல் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் முதலாவது மலைப்பாதையில் 31-வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ஒன்று நடமாடியது. அதைப் பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.

இதுகுறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான வனத்துறைக்கும், பறக்கும் படைத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினரும், பறக்கும்படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் சிறுத்தையை பிடிக்க முடியவில்லை காட்டுக்குள் சென்று விட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வெயில் சுட்டெரிப்பால் வன விலங்குகள் தண்ணீர் தேடி, வழிதவறி மலைப்பாதைகளுக்கு வந்து விடுகின்றன. திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களும், வாகனங்களில் செல்லும் பக்தர்களும் உஷாராக செல்ல வேண்டும். வன விலங்குகள் நடமாட்டம் இருந்தால் தேவஸ்தானத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்