சட்டசபை தேர்தலில் சிறுபான்மையின ஓட்டுகள் 20 சதவீதம் கிடைத்தது; குமாரசாமிக்கு, சி.எம்.இப்ராகிம் பதிலடி

சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு சிறுபான்மையினர் ஓட்டுகள் 20 சதவீதம் கிடைத்துள்ளது என குமாரசாமிக்கு அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2023-10-04 21:48 GMT

பெங்களூரு:

சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு சிறுபான்மையினர் ஓட்டுகள் 20 சதவீதம் கிடைத்துள்ளது என குமாரசாமிக்கு அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் பதிலடி கொடுத்துள்ளார்.

முஸ்லிம் ஓட்டுகள் கிடைக்கவில்லை

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியில் உள்ள சிறுபான்மையின தலைவர்களுக்கும், மாநில தலைவரான சி.எம்.இப்ராகிமுக்கும் பிடிக்கவில்லை. கூட்டணி விவகாரத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும் சட்டசபை தேர்தலில் முஸ்லிம் ஓட்டுகள் கிடைக்கவில்லை என்று பகிரங்க குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

அதிருப்தி உண்மை தான்

பா.ஜனதாவுடன் ஜனதாதளம் (எஸ்) கட்சி கூடடணி அமைக்க உள்ளது. இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டுமா?, அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தலுக்குமா? அல்லது மாநிலத்தில் அடுத்தடுத்து நடைபெற இருக்கும் தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலிலும் தொடருமா? என்பது தெரியவில்லை. பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தால், அதன்பிறகு ஜனதாதளம் (எஸ்) கட்சியின் சின்னம் என்ன ஆகும் என தெரியவில்லை.

அதுபோல், ஜனதாதளம் (எஸ்) கட்சி மதசார்பற்றது என்று சொல்லி கொள்ள சாத்தியமில்லை. ஜனதாதளம் (எஸ்) கட்சியின் கொள்கைகளை மூடி மறைக்க வேண்டுமா?, அல்லது பா.ஜனதா தனது கொள்கைகளை மூடி மறைக்குமா? என்பது தெரியவில்லை. மாவட்ட தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதால் சில தலைவர்களுக்கு அதிருப்தி இருப்பது உண்மை தான்.

16-ந் தேதி ஆலோசனை

அவர்கள் யாரென்று பகிரங்கமாக சொல்ல முடியாது. ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சேருவதற்காக மேல்-சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தேன்.

பதவிக்காக கட்சி விட்டு கட்சி மாறுபவன் நான் இல்லை. பா.ஜனதாவுடன் கூட்டணி குறித்து கட்சியில் உள்ள அனைத்து தரப்பினருடனும் கருத்தும், ஆலோசனையும் கேட்க உள்ளேன். இதற்காக வருகிற 16-ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளேன். அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவுக்கு தெரிவிப்பேன்.

20 சதவீத ஓட்டுகள்

சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சிக்கு சிறுபான்மையின மக்களின் ஓட்டுகள் கிடைக்கவில்லை என குமாரசாமி சொல்லி இருக்கிறார். சிறுபான்மையினரின் ஓட்டுகள் 20 சதவீதம் கிடைத்திருப்பதாக எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர்.

நானும், குமாரசாமியும் சேர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்திருந்தோம். மாநில தலைவராக சட்டசபை தேர்தலையொட்டி என்னிடம் இருந்த பொருட்கள் மூலம் சமையல் (தேர்தல் பணி) செய்திருந்தேன். பிரியாணி (ஓட்டுக்கள்) எதற்காக வரவில்லை என்று தெரியவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்