ஓணம் பம்பர் லாட்டரியால் ஏற்பட்ட தகராறு: நண்பனையே சரமாரியாக வெட்டிய கொடூரம்

கொலை செய்யப்பட்ட தேவதாஸ் மற்றும் அவரை கொன்ற அஜித் ஆகிய இருவரும் விறகு வெட்டும் தொழிலாளியாக இருந்துள்ளனர்.

Update: 2023-09-21 09:26 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி நடத்தப்பட்டு வருகிறது. ஓணம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின்போது பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுவது வழக்கம். அதில் பரிசுகள் லட்சங்கள் மற்றும் கோடிகளில் கொடுக்கப்படும் என்பதால் லட்சக்கணக்கானோர் லாட்டரி சீட்டுகளை வாங்குவார்கள். ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டது. விற்பனைக்காக மொத்தம் 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. அவற்றில் 74.51 லட்சம் லாட்டரி சீட்டுகள் விற்பனையாகின. அவற்றுக்கான குலுக்கல் நேற்று நடந்தது.

தங்களுக்கு பரிசு விழுமா? என்ற ஆவலில் லாட்டரி சீட்டு வாங்கிய அனைவரும் நேற்று காலை முதலே எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தேவலக்கரை பகுதியை சேர்ந்த தேவதாஸ்(வயது37) என்பவர் பம்பர் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருந்தார். அதனை தனது நண்பரான அஜித் (39)என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தார்.

நேற்று குலுக்கல் தினம் என்பதால், தனது லாட்டரி சீட்டை தேவதாஸ கேட்டிருக்கிறார். ஆனால் அஜித் தர மறுத்திருக்கிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அஜித், தன்னிடம் இருந்த கத்தியால் தேவதாசை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த தேவதாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தேவதாஸ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அஜித்தை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட தேவதாஸ் மற்றும் அவரை கொன்ற அஜித் ஆகிய இருவரும் விறகு வெட்டும் தொழிலாளியாக இருந்துள்ளனர். நண்பர்களான இவர்கள் இருவரும் தகராறு நடக்கும்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடிபோதையில் ஆத்திரத்தில் தேவதாசை கத்தியால் குத்தி அஜித் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்