நடுவானில் விமானத்தின் கழிவறையில் இருந்து வெளியேறிய புகை - கேரள பயணியின் செயலால் அதிர்ச்சி

நடுவானில் விமானத்தின் கழிவறையில் இருந்து புகை வந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.;

Update:2023-01-31 21:14 IST

திருவனந்தபுரம்,

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து பயணிகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்பைஸ்ஜெட் விமானம் கேரள மாநிலம் கொச்சிக்கு வந்துகொண்டிருந்தது.

அந்த விமானத்தில் கேரளாவின் திரிச்சூர் மாவட்டம் மலாவை சேர்ந்த சுகுமாரன் (வயது 62) என்ற பயணியும் பயணித்தார்.

இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பயணி சுகுமாரன் விமானத்தின் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு தான் கொண்டு வந்த சிகிரெட்டை பற்றவைத்து புகைத்துள்ளார்.

விமானத்தின் கழிவறையில் இருந்து புகை வெளியேறியதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக கழிவறையில் இருந்த பயணி சுகுமாரனை வெளியே வர அழைத்தனர்.

அவர் கழிவறையில் இருந்து வெளியே வந்த உடன் அவரிடம் விசாரித்ததில், கழிவறையில் வைத்து சிகிரெட் புகைத்ததாக பயணி சுகுமாரன் கூறினார்.

இதையடுத்து, அவரை தடுத்து நிறுத்திய ஊழியர்கள் கொச்சியில் விமானம் தரையிறங்கிய உடன் சம்பவம் குறித்து ஏர்போர்ட் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பயணியிடமிருந்து சிகிரெட் மற்றும் லைட்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நடுவானில் விமானத்தில் கழிவறையில் வைத்து சிகிரெட் புகைத்த பயணி சுகுமாரனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

ஏர் இந்தியா விமானத்தில் பயணி சிறுநீர் கழித்த விவகாரம் உள்பட விமான போக்குவரத்து தொடர்பாக சமீப நாட்களாக பல்வேறு புகார்களும், சர்ச்சைகளும் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்