'கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம்' என்ற புதிய பிரசாரத்தை தொடங்கினார் சுனிதா கெஜ்ரிவால்

என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர் என்று சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-29 08:00 GMT

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவர் அதிகமாக துன்புறுத்தப்படுவதாகவும் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து 22-ந் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், மதுபானக் கொள்கை தொடர்பான ஊழலில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாக வாதிடப்பட்டது. இந்த குற்றச்சாட்டில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கெஜ்ரிவாலை 28-ந் தேதி (இன்று) வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்து வந்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, வழக்கு விசாரணைக்கு 7 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை 4 நாட்கள் (வரும் 1-ம் தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி காலை 11.30 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்குமாறு அவரது மனைவி 'கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம்' என்ற புதிய பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பிறகு 3வது முறையாக காணொலியில் உரையாற்றிய டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கூறியதாவது,

"என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர். நாட்டில் உள்ள மிகவும் ஊழல் மற்றும் சர்வாதிகார சக்திகளுக்கு சவால் விடுத்துள்ளார், மக்கள் தங்கள் ஆசீர்வாதங்கள் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் அவரை ஆதரிக்க வேண்டும். தனது தரப்பு வாதங்களை கோர்ட்டில் துணிச்சலாக எடுத்து வைத்தவர். 8297324624 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கெஜ்ரிவாலுக்காக மக்கள் ஆசீர்வாதங்கள், பிரார்த்தனைகள் அல்லது வேறு ஏதேனும் செய்திகளை அனுப்பலாம், அதை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருகிணைப்பாளர் அவருக்கு தெரிவிப்பார்."

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்