உடல்நல பிரச்சினைக்காக ஜாமீன் கேட்ட கெஜ்ரிவால் - ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்த பா.ஜ.க.

கெஜ்ரிவாலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ள ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் விஜய் கோயல் தெரிவித்தார்.

Update: 2024-06-01 11:42 GMT

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடந்த மாதம் 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக இந்த ஜாமீனை வழங்கிய நீதிபதிகள், ஜூன் 2-ந்தேதி(நாளை) சரணடைந்து கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் எந்று உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதற்கிடையே தனக்கு சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் 26-ந்தேதி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். மேலும் சிறையில் இருந்த சமயத்தில் தனது உடல் எடை 7 கிலோ குறைந்துவிட்டதாகவும், தீவிர உடல்நல பிரச்சினைக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் கெஜ்ரிவால் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் விஜய் கோயல், டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள கெஜ்ரிவால் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த ஆம்புலன்சை போலீசார் தடுத்தி நிறுத்தினர். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் கோயல், "மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக உடல்நல பிரச்சினைகளை மேற்கோள் காட்டி கெஜ்ரிவால் நாடகம் நடத்துகிறார். இந்த ஆம்புலன்ஸ் மூலம் கெஜ்ரிவால் எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கு அவரை அழைத்துச் சென்று சில மணி நேரங்களில் அவர் மேற்கொள்ள வேண்டிய அனைத்து பரிசோதனைகளையும் முடித்து விடலாம்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்