கார்த்தி சிதம்பரம் நாடு திரும்பிய 16 மணி நேரத்துக்குள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் - சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவு

கார்த்தி சிதம்பரம் நாடு திரும்பிய 16 மணி நேரத்துக்குள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2022-05-20 16:16 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் முன்ஜாமீன் கோரி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டு நீதிபதிகள் விசாரித்தனர். கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புள்ளது என்பதற்கான ஆதாரங்கள் வாக்குமூலத்தை தவிர வேறு எதுவும் இல்லை.

எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறினார். இந்த நிலையில் சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த வழக்கு தற்போது ஆரம்பகட்டத்தில் இருப்பதால் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டிய எந்த முகாந்தரமும் இல்லை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று வாதிட்டார்.

இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், கோர்ட்டின் அனுமதியுடன் வெளிநாடு சென்றுள்ள கார்த்தி சிதம்பரம் மே 24-ந்தேதி நாடு திரும்புவதாக அவரது வக்கீல் தெரிவித்ததை பதிவு செய்து கொள்கிறோம். மேலும் கைது செய்யப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால் இந்த காலம் மிகவும் குறைவு என்றும் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்ற வாதத்தையும் ஏற்கிறோம்.

ஒருவேளை சிபிஐ அவரை கைது செய்யும் பட்சத்தில் குறைந்தபட்சம் 3 வேலை நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டு, மேலும் கார்த்தி சிதம்பரம் நாடு திரும்பிய 16 மணிநேரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்