கர்நாடகாவில் மீண்டும் பீர் விலையை உயர்த்த அரசு முடிவு..?

கர்நாடக பட்ஜெட் அடுத்த மாதம் (பிப்ரவரி) 16-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

Update: 2024-01-24 21:22 GMT

கோப்புப்படம்

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 5 உத்தரவாத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு (2023) காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் கலால் வரியை அரசு உயர்த்தி இருந்தது. இதனால் மதுபானங்கள், பீர் விலை ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்த்தப்பட்டு இருந்தது.

அதன்பிறகு, புத்தாண்டு தொடக்கத்தில் சில மதுபானங்களின் விலை மட்டும் உயர்த்தப்பட்டு இருந்தது. அதாவது தயாரிப்பு செலவு அதிகமாக இருப்பதாக கூறி, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட 4 விதமான மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு இருந்தது. அந்த மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தவில்லை என்றும், தயாரிப்பு நிறுவனங்களே உயர்த்தி இருப்பதாகவும் கலால்துறை மந்திரி ஆர்.பி.திம்மாபூர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் மீண்டும் பீர் விலையை மட்டும் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பீருக்கு மட்டும் 10 சதவீத கலால் வரி விதிக்க அரசு முன்வந்திருப்பதாகவும், அதுபற்றி அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம் அரசுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.20 கோடி முதல் ரூ.40 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. கர்நாடக பட்ஜெட் அடுத்த மாதம் (பிப்ரவரி) 16-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

அதற்கு முன்பாகவே பீருக்கு 10 சதவீத கலால் வரி விதிக்க முன்வந்திருப்பதாகவும் தெரிகிறது. இதனால் ஒரு பீர் விலை ரூ.10-ல் இருந்து ரூ.15 வரை உயர வாய்ப்புள்ளது. இதன்மூலம் கடந்த 9 மாதத்தில் பீர் விலை 2-வது முறையாக உயர இருப்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் ஆட்சியில் மதுபானங்களின் விலையை தொடர்ந்து உயர்த்துவதற்கு மதுப்பிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்