காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு
தேர்தல் நடைபெறுவதால் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கர்நாடக அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
புதுடெல்லி,
கடந்த 1958-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக காமராஜர் இருந்தபோது ரூ.189 கோடி மதிப்பில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2008-2009-ம் ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.3,290 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த மதிப்பீடு ரூ.5,166 கோடியாக உயர்ந்தது.
இந்த திட்டத்தின்படி திருச்சி அடுத்த மாயனூரில் இருந்து 20 மீட்டர் அகலம் உள்ள கால்வாய் வெட்டி 256 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா புதுப்பட்டி கிராமத்தில் குண்டாறில் இணைக்கப்படும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய வட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பயனடையும்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தமிழகத்தின் தென் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டிய கேள்விகள் குறித்தும், இடைக்கால உத்தரவுகள் குறித்தும் முடிவு செய்ய உள்ளதாக கூறி விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறுவதால் ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, ஆவணங்களை தாக்கல் செய்ய கர்நாடகத்துக்கு அளித்த அவகாசத்தை ஜூலை 12 வரை நீட்டித்து, விசாரணையை ஆகஸ்ட் 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.