தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் கர்நாடகா அணை கட்ட முடியாது -துரைமுருகன் தகவல்

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றில் கர்நாடக அரசு எந்த ஒரு அணையையும் கட்ட முடியாது என்று மத்திய மந்திரி உறுதி செய்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Update: 2022-06-23 00:03 GMT

புதுடெல்லி,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. குடிநீர் திட்டத்துக்காக அந்த அணை கட்டப்படுவதாக அந்த அரசு கூறுகிறது. ஆனால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி, காவிரி பாயும் மாநில அரசுகளின் ஒப்புதலை பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க அனுமதிக்க கூடாது என்றும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதங்கள் எழுதியுள்ளது.

அனைத்து கட்சி குழு சந்திப்பு

இந்த நிலையில் மேகதாது விவகாரத்தில் தமிழக மக்களின் எதிர்ப்பை மத்திய அரசுக்கு உணர்த்துவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களின் குழு டெல்லி நேற்று சென்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, டெல்லியில் நேற்று அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களின் குழு, மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்தது. அப்போது, காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக்கூடாது என்றும், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதையும் வலியுறுத்தி மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு வழங்கினர். பின்னர் மத்திய மந்திரியுடன் தமிழக குழுவினர் மேகதாது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்

இக்கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், வைகோ, தம்பிதுரை, ஏ.கே.பி. சின்ராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, கு.செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ்.பாலாஜி, நயினார் நாகேந்திரன்,

தி.ராமச்சந்திரன், பி.சண்முகம், எம்.எச். ஜவாஹிருல்லா, தி.வேல்முருகன், எம்.ஜெகன்மூர்த்தி மற்றும் தலைமை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா, உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, காவிரி தொழில் நுட்பக் குழு மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி வருமாறு:-

மத்திய மந்திரி உறுதி

மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத்துடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. மேகதாது பற்றி காவிரி நதிநீர் ஆணையம் விவாதிக்கக்கூடாது என்பதே எங்களது முக்கிய கோரிக்கையாக இருந்தது. மேகதாது பற்றி பேசுவதற்கு நதிநீர் ஆணையத்திற்கு எவ்வித அதிகார வரம்பும் இல்லை என்று நாங்கள் குறிப்பிட்டோம்.

ஆனால், அவர்களுக்கு உரிமை உள்ளது என வக்கீல்களிடம் கருத்து பெற்றுள்ளனர். அதேபோல் நாங்களும் சட்ட வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்ததில் அந்த கருத்து சரியானதல்ல என தெரிவித்தோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு முரணானது என்பதை வலியுறுத்தினோம்.

மத்திய மந்திரி எங்களிடம் முன்னரே பலமுறை உறுதி அளித்துள்ளபடி, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் கர்நாடக அரசு எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என்ற கருத்தை அவர்கள் உறுதி செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்