இன்று கூடுகிறது கர்நாடக சட்டசபை : புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்
கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்.;
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்-மந்திரியாக சித்தராமையா நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.
அதைத்தொடர்ந்து, நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை 3 நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக சித்தராமையா அறிவித்திருந்தார்.
இதையடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதலாவது சட்டசபை கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
9 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக இருப்பார் என்று சித்தராமையா அறிவித்துள்ளார்.
அதன்படி, தற்காலிக சபாநாயகர் ஆர்.வி.தேஷ்பாண்டே தலைமையில் இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. முதல் 2 நாட்கள், அதாவது இன்று மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 224 எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்க உள்ளார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் ஆர்.வி.தேஷ்பாண்டே பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
அதைத்தொடர்ந்து, 3-வது நாளான வருகிற 24-ந் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.