மதுபான கொள்கை வழக்கில் சிக்கிய கே. கவிதா உண்ணாவிரதம்: பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டி போராட்டம்

நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு செய்யும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

Update: 2023-03-10 06:14 GMT

டெல்லி,

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், அவர் ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றகாவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு கோர்ட்டு அனுமதியளித்தது. மேலும், சிசோடியாவை வரும் 20-ம்ன் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி மேலவை உறுப்பினரான கே. கவிதா மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நாளை (11-ம் தேதி) டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி கே.கவிதாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், டெல்லி ஜந்தர்மந்தரில் கே.கவிதா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நாளை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இன்று கே.கவிதா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு செய்யும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறி அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பாரதிய ராஷ்டிரிய சமிதி கே.கவிதா நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ஆம் ஆத்மி, சிவசேனா, திரிணாமுல் காங்கரஸ், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்