ஜூலை மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி: 2-வது அதிகபட்ச வசூல்

கடந்த ஜூலை மாதத்தில், ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. இது, இதுவரை கிடைத்ததில் 2-வது அதிகபட்ச வருவாய் ஆகும்.

Update: 2022-08-01 21:52 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

கடந்த ஜூலை மாதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 995 கோடிக்கு ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது.

ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டபின், கடந்த ஏப்ரல் மாதம் கிடைத்த ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடிதான் அதிகபட்ச தொகையாக இருந்தது. அதற்கடுத்து, 2-வது அதிகபட்ச வருவாய் இதுவே ஆகும். கடந்த ஆண்டின் ஜூலை மாத வசூலுடன் ஒப்பிடுகையில், இது 28 சதவீதம் அதிகம்.

தொடர்ந்து 5-வது மாதமாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு மேல், ஜி.எஸ்.டி. வசூலாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் ரூ.6 ஆயிரத்து 302 கோடி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் 34 சதவீதம் அதிகரித்து, ரூ.8 ஆயிரத்து 449 கோடிக்கு வசூலாகியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த ஆண்டின் ஜூலை மாதம் ரூ.129 கோடி வசூலானது. இந்த ஆண்டு 54 சதவீதம் அதிகரித்து, ரூ.198 கோடி வசூலாகியுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு வருவதையும், வரிஏய்ப்புக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளையும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரிப்பு உணர்த்துவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதிஆண்டில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகும் என்று பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களிலேயே ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி கிடைத்து விட்டது.

சமீபத்திய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரிவிகிதம் அதிகரிக்கப்பட்டதால், அடுத்தடுத்த மாதங்களிலும் வசூல் அதிகரிக்கும் என்று தெரிகிறது. எனவே, பட்ஜெட் கணிப்பை விட 40 சதவீதம் அதிக வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்