கோட்டா நகரில் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை நடப்பாண்டில் 13-வது சம்பவம்

கோட்டா நகரில் தங்கியிருந்து ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-07-04 14:11 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த சூழலில் சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கோட்டா நகரில் தங்கியிருந்து ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த 16 வயது மாணவர், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது நடப்பாண்டில் கோட்டா நகரில் நடந்துள்ள 13-வது தற்கொலை சம்பவம் ஆகும்.

பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் குர்மி, கடந்த 2 ஆண்டுகளாக கோட்டா நகரில் உள்ள மகாவீர் நகர் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, அங்குள்ள ஒரு தனியார் பயிற்சி ஜே.இ.இ. நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் சந்தீப் குமாரின் நண்பர் அவரது அறைக்குச் சென்றபோது கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது.

இதையடுத்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, சந்தீப் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர் சந்தீப் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்தீப் குமாரின் அறையில் தற்கொலை குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் கோட்டா நகரில் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்