மாநிலங்களவை தேர்தலையொட்டி பெங்களூருவில் வருகிற 9-ந்தேதி ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
மாநிலங்களவை தேர்தலையொட்டி வருகிற 9-ந் தேதி பெங்களூருவில் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
பெங்களூரு:
வேறு கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பு
கர்நாடகத்தில் காலியாகும் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 2 இடங்களில் பா.ஜனதாவும், ஒரு இடத்தில் காங்கிரசும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. 4-வது உறுப்பினர் பதவியை பெறுவதற்கு பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக குபேந்திர ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ஜனதாதளம் (எஸ்) கட்சி வசம் 32 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. அந்த கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற இன்னும் 13 எம்.எல்.ஏ.க்ககளின் ஆதரவு தேவையாக உள்ளது. அதே நேரத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.க்களே பா.ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
9-ந் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
இதையடுத்து, மாநிலங்களவை தேர்தல் குறித்து விவாதிக்க வருகிற 9-ந் தேதி பெங்களூருவில் உள்ள ஜே.பி.பவனில் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, மாநில தலைவர் சி.எம்.இப்ராஹிம் தலைமை தாங்க உள்ளனர். இந்த கூட்டத்தில் வேறு கட்சிக்கு வாக்களிக்க கூடாது என்று எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
தங்களது கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து எம்.எல்.ஏ.க்களிடம் குமாரசாமி தெரிவிக்க உள்ளார். அதே நேரத்தில் கட்சி மீது அதிருப்தியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தி, மாநிலங்களவை தேர்தலில் தங்களது கட்சி வேட்பாளரை ஆதரிக்கும்படியும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகங்களை வகுக்கவும் குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.