வளர்ச்சி பணிகளை டெண்டர் விடாமல் வேண்டியவர்களுக்கு கொடுப்பதா?

கோலார் மாவட்டத்தில் ரூ.12.70 கோடிக்கான வளர்ச்சிப் பணிகளை டெண்டர் விடாமல் வேண்டியவர்களுக்கு கொடுப்பதா? என்று மந்திரி முனிரத்னா அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

Update: 2022-10-12 18:45 GMT

கோலார் தங்கவயல்:

ரூ.12.70 கோடி

கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளுக்கான ஆவணங்களை மந்திரி முனிரத்னா ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் ரூ.12.70 கோடிக்கான வளர்ச்சிப் பணிகள் டெண்டர் விடாமல் வேண்டியவர்களுக்கு ஒதுக்கியது தெரியவந்தது. இதனால் ஆவேசம் அடைந்த மந்திரி முனிரத்னா, அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் மக்களின் வரிப்பணத்தை ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து கொள்ளை அடிக்கிறீர்களா?. இவ்வளவு பெரிய தொகைக்கான வளர்ச்சிப் பணிகளை வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கீடு செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

கமிஷன் கேட்பதாக குற்றம்

ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து மக்கள் வரிப்பணத்தை அதிகாரிகள் கொள்ளை அடிப்பது மட்டுமின்றி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறீர்களா?. வளர்ச்சிப் பணிகள் செய்யும் ஒப்பந்ததாரர்கள் தரமாக வளர்ச்சிப் பணிகளை செய்யவில்லை என்பதை தட்டிக்கேட்டால் அரசு மீது கமிஷன் கேட்பதாக குற்றம்சாட்டுவதுடன் எதிர்க்கட்சியுடன் சேர்ந்துகொண்டு அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த அதிகாரிகள் காரணமாக இருக்கிறீர்கள்.

டெண்டர் அறிவிக்காமல் தனிப்பட்ட நபருக்கு வளர்ச்சி பணிகள் செய்ய ஒத்துழைப்பு அளித்த அதிகாரிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

உடனே அறிவிக்க வேண்டும்

மேலும் வேண்டியவர்களுக்கு வளர்ச்சிப் பணிகள் செய்ய பிறப்பித்த அனுமதியை உடனே ரத்து செய்து விட்டு முறைப்படி டெண்டர் விடவேண்டும். இல்லை என்றால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி முனிரத்னா எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் வளர்ச்சி பணிகள் செய்யும் விவகாரத்தில் தரம் தான் அரசுக்கு முக்கியம். எனவே, ரூ.12.70 கோடிக்கான வளர்ச்சிப் பணிகளை உடனே டெண்டர் அறிவித்து நியாயமான முறையில் டெண்டர் எடுப்பவர்களுக்கு வளர்ச்சிப் பணிகள் செய்ய வழி செய்யவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்