ஐ.பி.எஸ். ஆபீசர், சுழலும் சிவப்பு விளக்கு கார்... பல பெண்களிடம் மோசடி; 8-ம் வகுப்பு படித்த வாலிபர் கைது
ஐ.பி.எஸ். ஆபீசர் என கூறி கொண்டு டாக்டர் உள்பட பல பெண்களிடம் பணமோசடி செய்த 8-ம் வகுப்பு படித்த வாலிபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.;
புதுடெல்லி,
மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரை சேர்ந்தவர் விகாஸ் கவுதம். 8-ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அதன்பின்னர், டெல்லிக்கு சென்ற அவர் முகர்ஜிநகர் பகுதியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அந்த பகுதிக்கு மத்திய அரசு பணியில் உள்ள பல்வேறு அதிகாரிகளும் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், டெல்லியில் உள்ள பெண் டாக்டர் ஒருவர் விகாஸ் மீது போலீசில் புகார் அளித்து உள்ளார்.
அதில், ஐ.பி.எஸ். ஆபீசர் என கூறி விகாஸ் தன்னிடம் ரூ.25 ஆயிரம் பணமோசடி செய்து விட்டார் என தெரிவித்து உள்ளார். இந்த புகாரை தொடர்ந்து, டெல்லி சைபர் குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்தி விகாசை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன. தன்னை 2021-ம் ஆண்டுக்கான ஐ.பி.எஸ். ஆபீசர் என கூறி மக்களிடம் பணமோசடியில் ஈடுபட அவர் திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்காக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை தொடங்கியுள்ளார். அதில், உயரதிகாரிகளுடன் ஒன்றாக இருக்கும் பல்வேறு புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
சுழலும் சிவப்பு விளக்கு கொண்ட கார் ஒன்றின் முன்னால் நிற்கும் புகைப்படம் ஒன்றையும் அதில் வைத்துள்ளார். அவர் தன்னை உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் அமைந்த ஐ.ஐ.டி. கான்பூரில் படித்த பட்டதாரி என்றும் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
விகாஸ், பெண் டாக்டர் போன்று பல பெண்களிடம் பணத்திற்காக மோசடியில் ஈடுபட்டு உள்ளார் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.