வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்
அடிக்கல் நாட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
வாரணாசி,
பிரதமர் மோடி, தான் போட்டியிட்டு ஜெயித்த வாரணாசி தொகுதியில், விளையாட்டு பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நாளை (சனிக்கிழமை) அடிக்கல் நாட்டுகிறார்.
இதற்காக உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ரூ.121 கோடி மதிப்புள்ள நிலத்தை வாரணாசியில் கையகப்படுத்தி கொடுத்து உள்ளார். அதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.330 கோடியில் சர்வதேச தரத்துடன் பிரமாண்ட ஸ்டேடியத்தை நிறுவ உள்ளது.
வாரணாசியின் ராஜதலா பகுதியில் உள்ள கஞ்சாரி கிராமத்தில் இந்த மைதானம் அமைகிறது. 30 மாதங்களில் இதை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் 30 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும். இந்த மைதானத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் கலந்து கொள்கிறார்கள்.