கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
பனாஜி,
கோவா சுற்றுலாவிற்கு பெயர்போன ஒரு சிறிய மாநிலமாகும். இங்கு ஆண்டுதோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர்.
ேகாவாவில் பொதுவாக சுற்றுலா சீசன் என்பது நவம்பரில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். கடந்த 2019-ம் ஆண்டு சீசனில் மட்டும் 72 லட்சம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள், 9 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். பின்னர் கொரோனா பரவலால் இந்த எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது.
தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்ததையொட்டி சுற்றுலாவை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் 2-வது சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதனால் கொரோனாவுக்கு முன்பு இருந்ததுபோல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த சீசனில் சுமார் 81 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என சுற்றுலாத்துறை மந்திரி ரோகன் கவுண்டே கூறினார்.