போதை சாக்லெட் விற்ற வழக்கில் வியாபாரிகள் 2 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டம் பாய்ந்தது
மங்களூருவில் போதை சாக்லெட் விற்ற வழக்கில் வியாபாரிகள் 2 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டம் பாய்ந்தது.;
மங்களூரு-
மங்களூருவில் போதை சாக்லெட் விற்ற வழக்கில் வியாபாரிகள் 2 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
போதைப்பொருள்
தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதனை தடுப்பதற்காக போலீசாா் ரோந்து பணி, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மங்களூரு டவுன் ரதவீதி மற்றும் பழநீர் சாலையில் உள்ள கடைகளில் போதை சாக்லெட் விற்பனை செய்யபடுவதாக மங்களூரு வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கடந்த ஜூலை 19-ம் தேதி மங்களூரு வடக்கு போலீசார் ரத வீதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மனோகர் சேட் (வயது 49) என்பரது கடையில் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது கடையில் போைத சாக்லெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கடையில் இருந்து ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள 12,592 போதை சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மாணவர்களுக்கு விற்பனை
இதேப்போல் பழநீர் சாலையில் உள்ள பெசான் சோன்கர் (45) என்பவரது கடையில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.5,500 மதிப்பிலான போதை சாக்லெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பெசானை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை சாக்லெட்டுகள் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மனோகர் சேட், பெசான் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், போலீசார் பறிமுதல் செய்த போதை சாக்லெட்டுகளை ஆய்வுக்காக தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அந்த சாக்லெட்டுகளில் கஞ்சா கலந்து இருப்பது உறுதியானது. இந்தநிலையில் மனோகர் சேட், பெசான் சோன்கர் ஆகிய 2 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் மங்களூரு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.