சிவமொக்காவில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிப்பு

சிவமொக்காவில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2023-05-09 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்காவில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

144 தடை உத்தரவு

கர்நாடக சட்டசபை தேர்தல் இன்று(புதன்கிழமை) நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற 13-ந்தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தையும் தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இதில் நேற்று சிவமொக்கா புறநகர் தேர்தல் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரம் உள்பட பொருட்களை தேர்தல் ஊழியர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பஸ்கள் மூலம் கொண்டு சென்றனர்.

வாக்குச்சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் மையத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் போது எந்திரங்கள் பழுதடைந்தால் உடனே அதனை சரிசெய்ய வேண்டும் என தேர்தல் ஊழியர்களுக்கு பயிற்சியின் போது அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அரசு பஸ் சேவை பாதிப்பு

மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் உள்ளனர். அந்த வாக்குச்சாவடிகள் வீடியோ மற்றும் இணையவழி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணிக்கு அரசு பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனால் இன்று(புதன்கிழமை) அரசு பஸ் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்