மங்களூருவில் போதைப் பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
மங்களூருவில் போதைப்பொருட்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
மங்களூருவில் போதைப்பொருட்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
பெங்களூருவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், வாக்கி-டாக்கி, வெடி மருந்துகள், செல்போன்கள் ஆகியவற்றை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் பெங்களூருவில் 10 இடங்களில் நாசவேலையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.
இந்தநிலையில் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மங்களூரு டவுன் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் 180 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி ஆகியவை இருந்தன.
3 பேர் கைது
அவற்றின் மொத்த மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். இதுதொடர்பாக சூரத்கல்லை சேர்ந்த முகமது நியாஸ் (வயது28), தளப்பாடியைச் சேர்ந்த நியாஸ் (31), கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த முகமது ரசின் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் 3 பேரும் மும்பையில் இருந்து எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை வாங்கி மங்களூருவுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நியாஸ் மீது உருவா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கோனஜே போலீசாரை தாக்கிய வழக்கும், உடுப்பியில் கொைல, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து மங்களூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.