சிக்கமகளூருவில் காட்டுயானைகள் தொடர் அட்டகாசம்

சிக்கமகளூருவில் விளை நிலத்திற்குள் புகுந்த காட்டுயானை பயிர்களை மிதித்து நாசப்படுத்தியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2023-06-13 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் விளை நிலத்திற்குள் புகுந்த காட்டுயானை பயிர்களை மிதித்து நாசப்படுத்தியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

காட்டுயானை நடமாட்டம்

சிக்கமகளூரு மாவட்டத்தில் கெசுவினஹக்கு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி காட்டுயானைகள் கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு செல்கின்றன.

இந்த காட்டுயானை நடமாட்டத்தால் விவசாய கூலி தொழிலாளிகள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கும்படி வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் காட்டுயானை அட்டகாசம் செய்திருப்பது கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த நஜீர் என்பவரின் தோட்டத்திற்குள் காட்டுயானை ஒன்று நள்ளிரவு புகுந்தது.

விளை பயிர்கள் நாசம்

அந்த யானை நஜீர் தோட்டத்தில் இருந்த தென்னை, பாக்கு மரங்களை முறித்து எறிந்ததுடன், வாகனங்கள் மற்றும் பம்புசெட்டில் இருந்த மோட்டார்களையும் சேதப்படுத்தியது. இதையடுத்து அந்த காட்டுயானை நெல் மற்றும் காபி செடிகள் பயிரிட்டிருந்த தோட்டத்திற்குள் சென்று அங்கிருந்த விளை பயிர்களை நாசப்படுத்திவிட்டு சென்றது. நேற்று காலை தோட்டத்திற்கு ெசன்ற நஜீர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது நஜீர் தான் எடுத்து வைத்திருந்த வீடியோ ஒன்றை காண்பித்தார். பின்னர் அவர் நஷ்டம் அடைந்த விளை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை வைத்தார். இதேபோல கிராம மக்களும் வனத்துறையினரை சுற்று வளைத்து காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை கேட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

காட்டெருமை அட்டகாசம்

இதேபோல சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா அசிருகொடிகெரே கிராமத்தில் காட்டெருமை ஒன்று விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்திவிட்டு சென்றுள்ளது. இது குறித்து கொப்பா வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள் காட்டெருமை, காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

எனவே அதன் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர். இதை கேட்ட கொப்பா வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்