கர்நாடக தேர்தலில் வெறுப்பு பேச்சுகளில் ஈடுபடுவதாக புகார்அமித்ஷா, நட்டா, யோகி ஆதித்யநாத் மீது உடனடி நடவடிக்கைதேர்தல் கமிஷனில் காங்கிரஸ் மனு

கர்நாடக தேர்தலில் அமித்ஷா, நட்டா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் வெறுப்பு பேச்சுகள் பேசி வருவதாகவும், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் கட்சி மனு அளித்துள்ளது.

Update: 2023-05-02 22:45 GMT

புதுடெல்லி, 

கர்நாடக தேர்தலில் அமித்ஷா, நட்டா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் வெறுப்பு பேச்சுகள் பேசி வருவதாகவும், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் கட்சி மனு அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் அஜய் மக்கான், விவேக் தங்கா, சல்மான் குர்ஷித், பவன் கேரா ஆகியோர் நேற்று தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு சென்றனர்.

அங்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

பின்னர், விவேக் தங்கா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் அமித்ஷா, நட்டா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் வெறுப்பு பேச்சுகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கலவரம் வெடிக்கும் என்று கூறியுள்ளனர்.

குறிப்பாக, அமித்ஷா என்ன அர்த்தத்தில் அப்படி பேசினார்? அப்படியானால், காங்கிரஸ் கட்சி கலவரத்தில் ஈடுபடும் என்று சொல்கிறாரா?

அரசியல் சட்ட பதவி வகிப்பவர்கள் இதுபோன்ற வெறுப்பு பேச்சுகளில் ஈடுபடக்கூடாது. அது சட்டத்துக்கு எதிரானது. சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்தி விடும். அவர் பதவி ஏற்றபோது எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி நடந்து கொள்ளவில்லை.

இதை தேர்தல் கமிஷனிடம் சுட்டிக்காட்டி இருக்கிறோம். வெறுப்பு பேச்சில் ஈடுபடுவோர் மீது உடனே வழக்குப்பதிவு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் நகல்களை சமர்ப்பித்துள்ளோம்.

அதன் அடிப்படையில், 3 பேர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்