உலகின் தலைசிறந்த கம்ப்யூட்டர் கோடிங் நிபுணராக டெல்லி ஐஐடி மாணவர் தேர்வு; 10,000 டாலர்கள் பரிசுத் தொகை!

டெல்லி ஐஐடி மாணவர் கலாஷ் குப்தா டிசிஎஸ் நடத்திய ‘கோட்-விட்டா’ போட்டியில் 10,000 டாலர்கள் பரிசுத் தொகை வென்றுள்ளார்.

Update: 2022-06-05 09:51 GMT

புதுடெல்லி,

டெல்லி ஐஐடி மாணவர் கலாஷ் குப்தா என்பவர் டிசிஎஸ் நிறுவனம் நடத்திய 'கோட்-விட்டா' சவால் போட்டியின் 10வது சீசனில் பங்கேற்று வென்றுள்ளார். அவருக்கு 10,000 டாலர்கள் (தோராயமாக ரூ.7.75 லட்சம்) பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

குப்தா ஐஐடியில் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பாடப்பிரிவில் பயின்று வரும் மாணவர் ஆவார். முன்னதாக, 2018ம் ஆண்டு ஜேஇஇ நுழைவுத் தேர்வில், கலாஷ் குப்தா அகில இந்திய அளவில் 3வது ரேங்க் பெற்றவர்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, 'கோட்-விட்டா' சவாலில் 87 நாடுகளில் இருந்து 1 லட்சம் போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் குப்தாவும் ஒருவர். உலகின் தலைசிறந்த கணினி கோடிங் குறியீட்டாளர்கள் பட்டியலில், பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 21 இந்திய மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்ற போட்டியாளர்கள் சிலி மற்றும் தைவானைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

'கோட்-விட்டா' போட்டி உலகின் மிகப்பெரிய கணினி கோடிங் போட்டியாக, கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தைப் பெற்றுள்ளது. கம்ப்யூட்டர் புரோகிராமிங் கோடிங் என்பதை ஒரு விளையாட்டு போட்டியாக முன்னிறுத்த வேண்டுமென்பதை இலக்காக கொண்டு 'கோட்-விட்டா' நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் சவாலான இந்த போட்டியில், கடினமான புரோகிராமிங் கேள்விகள் கேட்கப்படும்.

இது குறித்து அவர் கூறுகையில், "நான் போட்டியைத் தொடங்கியபோது, முதல் 3 இடங்களுக்குள் இருப்பேன் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் இது மிகவும் எளிமையான அனுபவம், பரிசுத் தொகையைப் பற்றி நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

முதல் கேள்விக்கு சரியான விடையை கோடிங் எழுத, நான் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்ததால், ஆரம்பத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நான் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னேறியபோது, ​​மற்ற சில கேள்விகளுக்கு கோடிங் எழுதி, நான் மேலும் நம்பிக்கையைப் பெற்றேன். மேலும் நான் முதல் 3 இடங்களுக்குள் வருவேன் என்ற நம்பிக்கை இருந்தது" என்று கூறினார்.

குப்தாவை டெல்லி ஐஐடியின் இயக்குனர் ரங்கன் பானர்ஜி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்