இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடினால்... உ.பி. முதல்-மந்திரி கடும் எச்சரிக்கை

உத்தர பிரதேசத்தில் 2 கோடி இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என யோகி ஆதித்யநாத் பேசினார்.

Update: 2024-03-03 13:29 GMT

கோரக்பூர்,

உத்தர பிரதேசத்தில் கோரக்பூர் நகரில் நடந்த மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், 1,500 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்களும், 3 ஆயிரம் மாணவர்களுக்கு டேப்லெட்களையும் வழங்கி அவர் பேசினார்.

இளைஞர்களை டிஜிட்டல் அடிப்படையில் சக்தி படைத்தவர்களாக உருவாக்கும் நோக்குடனும், கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் அவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுபற்றி பேசிய யோகி ஆதித்யநாத், இந்த தொலைநோக்கு திட்டத்தின் கீழ் இதுவரை பாகுபாடின்றி 20 லட்சம் இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் முன்பே விநியோகிக்கப்பட்டு விட்டன. மொத்தம் 2 கோடி இளைஞர்களுக்கு இவற்றை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என பேசினார்.

போட்டி தேர்வுகளுக்கு இளைஞர்கள் தயாராகும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அபியுதய் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என கூறினார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களின் மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் சிறையிலேயே கழியும். அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகளின் சொத்துகளும் முடக்கப்படும் என கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்