காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கமிஷன் கேட்டாலும் பகிரங்கப்படுத்துவேன்; அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் எச்சரிக்கை
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கமிஷன் கேட்டாலும் பகிரங்கப்படுத்துவேன் என்று அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கமிஷன் கேட்டாலும் பகிரங்கப்படுத்துவேன் என்று அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து பேசிய பிறகு, அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கமிஷன் கேட்கவில்லை
பா.ஜனதா ஆட்சியில் அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள 40 சதவீதம் கமிஷன் கேட்டனர். இதனை நானே பகிரங்கப்படுத்தினேன். இந்த கமிஷன் கொடுக்காமல் இருக்க பா.ஜனதா ஆட்சியில் ஒப்பந்ததாரர்கள் மிகப்பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டி இருந்தது. அப்போது முதல்-மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை என்ன செய்தார்?. இப்போது என்னிடம் அவர் கேள்வி கேட்கிறார்.
40 சதவீத கமிஷன் குறித்து விசாரிப்பதாக பசவராஜ் பொம்மை கூறினார். ஆனால் விசாரணை நடைபெறவில்லை. தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஒரு மாதம் தான் ஆகிறது. இந்த ஒரு மாதத்தில் அரசு அதிகாரிகளோ, வேறு யாருமோ ஒப்பந்ததாரர்களிடம் பணம் கேட்கவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கமிஷன் கேட்டாலும், அதனையும் பகிரங்கப்படுத்துவேன்.
ஒப்பந்த தொகையை விடுவிக்க...
அதற்காக அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூற விரும்பவில்லை. மாநிலம் முழுவதும் நடைபெற்ற வளர்ச்சி பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வரை கொடுக்க வேண்டிய உள்ளது. அந்த ஒப்பந்த தொகையை கூடிய விரைவில் விடுவிக்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கடந்த ஆட்சியில் நடைபெற்ற 40 சதவீத கமிஷன் பற்றி முதல்-மந்திரியுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.
பா.ஜனதா ஆட்சியில் கூறப்பட்ட 40 சதவீத கமிஷன் விவகாரம் குறித்து சரியான நேரத்தில் ஆவணங்களை வெளியே விடுவோம். தற்போது அந்த விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருவதால், அதுபற்றி வேறு எதுவும் பேச விரும்பவில்லை.
இவ்வாறு கெம்பண்ணா கூறினார்.