நாடு முழுவதும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை கொடுக்க வந்துள்ளேன் - மணீஷ் சிசோடியா

நாடு முழுவதும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை கொடுக்க வந்துள்ளேன் என்று மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-22 09:29 GMT

காந்திநகர்,

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வருபவர் மணீஷ் சிசோடியா.

இவர், கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளை கவனித்து வருகிறார். டெல்லியில் மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., மணீஷ் சிசோடியா, ஆயத்தீர்வை முன்னாள் ஆணையர் அரவா கோபி கிருஷ்ணா மற்றும் 2 அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட 31 இடங்களில் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா உள்பட 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தால் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று பாஜக தூது அனுப்பியுள்ளதாக டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

இந்த விவகாரம் மத்திய பாஜக அரசுக்கும் டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கும் பெரும் மோதலாக வெடித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோர் இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத் சென்றுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி களம் காண தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் மணீஷ் சிகோடியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகினால் என் மீதான சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகள் திரும்பப்பெறப்படும் என எனக்கு குறுந்தகவல் வந்துள்ளது. கட்சியை விட்டு விலகும்போது அதை உடைத்துவிட வேண்டும் எனவும், நான் அவ்வாறு செய்தால் எனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் எனவும் அந்த குறுந்தகவலில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. நான் முதல்-மந்திரியாக மாற இங்கு வரவில்லை. நாடு முழுவதும் உள்ள மாணவ-மாணவ்களுக்கு சிறந்த கல்வி கொடுக்க நான் வந்துள்ளேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்