உடைகிறதா இந்தியா கூட்டணி? வெளியான பரபரப்பு தகவல்

‛இந்தியா' கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

Update: 2023-09-15 18:36 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்தும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க. உள்பட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன.

'இந்தியா' என்று பெயரிடப்பட்ட இக்கூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள், பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடந்துள்ளன. பல்வேறு பிரச்சினைகளை ஆராய 14 உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதலாவது கூட்டம் நடந்தது. டெல்லியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் இக்கூட்டம் நடந்தது.

14 உறுப்பினர்களில் 12 பேர் மட்டும் கலந்து கொண்டனர். சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), ஜாவீத் அலிகான் (சமாஜ்வாடி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்டிரீய ஜனதாதளம்), உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி), ராகவ் சதா (ஆம் ஆத்மி), சஞ்சய் ஜா (ஐக்கிய ஜனதாதளம்), சஞ்சய் ராவத் (உத்தவ் சிவசேனா) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டணியில் அனைத்து மாநிலங்களிலும் விரைவில் தொகுதி பங்கீடு மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

இந்நிலையில் தான் தொகுதி பங்கீட்டின்போது ‛இந்தியா' கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு பிரச்சினை வெடிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்க மாநில தொகுதி பங்கீட்டில் தான் பிரச்சினை உருவாகும் என கூறப்படுகிறது. மேலும் அதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி உள்ளார். அங்கு பிரதான கட்சிகளாக காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளன. இதில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் ‛இந்தியா' கூட்டணியில் உள்ளன. இந்த கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

ஏனென்றால் கடந்த வாரம் நடந்து முடிந்த துப்குரி சட்டசபை இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்த நிலையில் பாஜகவும் அங்கும் வேட்பாளரை களமிறக்கியது.

இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது. இந்த இடைத்தேர்தல் என்பது ‛இந்தியா' கூட்டணி உருவான பிறகு நடந்தாலும் கூட அங்கு திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது. மேற்கு வங்காளத்தை பொறுத்தமட்டில் மொத்தம் அங்கு 42 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில் தற்போது அதிக இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இத்தகைய சூழலில் தான் அந்த தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை. அதோடு மேற்கு வங்கத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கு என்பது ஆண்டுதோறும் சரிந்து வருகிறது.

இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி விட்டு கொடுக்க விரும்பமாட்டார் என கூறப்படுகிறது. இதனால் அங்கு குழப்பம் உருவாக அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் மம்தா பானர்ஜி தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியுடன் நல்ல உறவை வைத்துள்ளார்.

இதனால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் சுமூகமாக நடக்க வாய்ப்புள்ளது. மேலும் சோனியா காந்திக்காக, மம்தா பானர்ஜியும் தொகுதிகளை விட்டு கொடுக்க முன்வரலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மாறாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான தொகுதி பங்கீடு மிகவும் சிரமமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் ‛இந்தியா' கூட்டணியில் முதல் பிரச்சினை என்பது மேற்கு வங்காளத்தில் இருந்து வரலாம் என கூறப்படுகிறது.

மேலும் தற்போது மேற்கு வங்க மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி துபாய், ஸ்பெயின் நாடுகளுக்கு 12 நாள் சுற்றுப்பயணம் செய்துள்ளார். தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அங்குள்ளவர்களை அழைக்க அவர் சென்றுள்ளார்.

இதனால் தற்போது வரை மேற்கு வங்க மாநிலத்தில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. மம்தா பானர்ஜி இந்தியா திரும்பியவுடன் இந்த பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர், மராட்டியம், பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஏற்கனவே நடந்து வருகிறது. அங்கெல்லாம் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஏற்கனவே கூட்டணியாக இயங்கி வருகின்றன.

‛இந்தியா' கூட்டணியில் இடங்களைப் பகிர்வதில் மேற்கு வங்காளமும் கேரளாவும் அதிகபட்ச சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும்.

கேரளாவிலும் இதே நிலைதான். காங்கிரசும் இடதுசாரி முன்னணியும் பல ஆண்டுகளாகப் போட்டியாக இருந்து வருகின்றன. இங்கும், சீட் பங்கீடு குறித்த ஒருமித்த கருத்து ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

பஞ்சாப் மற்றும் டெல்லியில் பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கு முன், பரஸ்பர பூசல்களைத் தீர்ப்பதற்கான திட்டத்தை இந்தியா கூட்டணி முடிவு செய்ய வேண்டும்.

இந்தியக் கூட்டணியில் பல அரசியல் கட்சிகள் மாநிலங்களில் ஒன்றுக்கொன்று மோதுகின்றன அல்லது அவற்றுக்கிடையே பழைய அரசியல் சண்டை இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்