ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்: இரண்டு மாலுமிகள் பலி

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் கப்பல் மாலுமிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2024-03-06 22:29 GMT

கோப்புப்படம்

ஏடன்,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் ஹமாசுக்கு ஆதரவாக இருந்து வரும் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல், ஏடன் வளைகுடா போன்ற பகுதிகள் வழியாக செல்லும் இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய சரக்கு கப்பல்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த பார்படாஸ் கொடியேற்றப்பட்ட 'டுரூ கான்பிடன்ஸ்' என்கிற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணையை வீசினர். இதில் அந்த கப்பல் பலத்த சேதம் அடைந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு மாலுமிகள் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கார்னி என்கிற போர் கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசினர். எனினும் அமெரிக்க போர் கப்பல் அந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திவிட்டது.

மேலும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக வெடிகுண்டுகளுடன் பயணித்த 3 ஆளில்லா படகுகளையும் அமெரிக்க போர் கப்பல் தாக்கி அழித்தது.

Tags:    

மேலும் செய்திகள்