இந்தோ-திபெத் எல்லை படை பயிற்சி கல்லூரிக்கு குளு குளு வசதியுடனான விடுதி கட்டிடங்கள்
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி கல்லூரிக்கான விடுதி கட்டிடங்களை மத்திய இணை மந்திரி நித்யானந்த ராய் திறந்து வைத்து நாட்டுக்கு இன்று அர்ப்பணித்துள்ளார்.
ஆல்வார்,
ராஜஸ்தானின் ராம்கார் நகரில் பெராவஸ் கிராமத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினருக்கான மத்திய பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இது ஆல்வார் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
இதில், 2 புதிய கட்டிடங்களை மத்திய இணை மந்திரி நித்யானந்த ராய் திறந்து வைத்து நாட்டுக்கு இன்று அர்ப்பணித்துள்ளார். இந்த கட்டிடங்களில், பயிற்சி பெறுபவர்களுக்கான 2 விடுதிகள் மற்றும் 83 குடும்பங்கள் வசிக்க கூடிய இல்லங்கள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த 2 விடுதிகளில் மொத்தம் 800 பயிற்சியாளர்கள் வரை தங்க முடியும். இதில், சிறப்புக்குரிய விசயம் என்னவெனில், விடுதிகளில் முழு அளவில் ஏ.சி. வசதி செய்யப்பட்டு உள்ளது.
நாட்டில் உள்ள மத்திய ஆயுத போலீஸ் படையினருக்கான வேறு எந்த விடுதிகளிலும் இல்லாத வகையில் முதன்முறையாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இதனை இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நித்யானந்த ராய் வீரர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.