இடைக்கால பட்ஜெட்: இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்
தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள் எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
இந்தநிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும்.
ஏழு லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது: வருமான வரி செலுத்தும் நடைமுறை தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.1% கட்டுப்படுத்தப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.
40 ஆயிரம் சாதாரண ரெயில் பெட்டிகள் வந்தே பாரத் ரெயில் திட்ட பெட்டிகளாக மாற்றப்படும். இந்தியாவில் அந்நிய முதலீடுகள் 596 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது; லட்சத்தீவில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆண்டுகளில் கடல் உணவு ஏற்றுமதியில் இருமடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் உற்பத்திக்கும் சார்ஜிங் மையங்கள் அமைக்கவும் ஊக்கம் தரப்படும்: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 1.1 கோடி இந்தியர்கள், திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும்: நிதி மந்திரி பட்ஜெட் உரை
சமூக நீதியே பா.ஜ.க. அரசின் பிரதான நோக்கம் -மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
பத்தாண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அனைவரையும் அரவணைக்கும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தேசியக் கல்விக்கொள்கை இந்திய கல்வி துறையில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது- நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை
எங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் மீண்டும் எங்களை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. விவசாயிகள், ஏழைகள், பெண்கள் ஆகியோருக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்
இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.