மதுரை கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த குஜராத் மாணவி பாலியல் பலாத்காரம் 2 தமிழக மாணவர்கள் கைது
மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த குஜராத் மாணவி பாலியல் பலாத்காரம் 2 தமிழக மாணவர்கள் கைது;
மதுரை
ஆன்லைனில் சார்ட்டர்ட் அக்கவுண்ட் படித்து வரும் அகமதாபாத்தை சேர்ந்த மாணவி, 2022ஆம் ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள மதுரை வந்து உள்ளார். தெப்பக்குளம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். கருத்தரங்கிற்காக வந்து அதே விடுதியில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த அஷீஷ் ஜெயின், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெரோம் கதிரவன் ஆகியோர் மாணவிக்கு அறிமுகமாகியுள்ளனர்.
இந்நிலையில், மாணவிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு மருந்தும், உணவும் வாங்கிக் கொடுத்து உள்லனர். உணவை உட்கொண்ட சிறிது நேரத்தில் மாணவி மயக்கமடைந்து உள்ளார்.
மாணவியை இருவரும் தனித்தனியே பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.
குஜராத் திரும்பிய மாணவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படவே பெற்றோரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்ததையடுத்து உள்ளூர் போலீசில் புகாரளித்து உள்ளார். இது தொடர்பாக மதுரையில் புகாரளிக்க அவர்கள் கூறியுள்ளனர்.
ஆன்லைன் மூலமாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனருக்கு மாணவி புகார் அளித்து உள்ளார். இதையடுத்து உதவி ஆணையர் காமாட்சி, மாணவியிடம் வாட்ஸ்அப் வீடியோவில் நடத்திய விசாரணையின் மூலம் புகார் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சென்னையை சேர்ந்த அஷீஷ் ஜெயின், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெரோம் கதிரவன் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.