ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்த பூர்னேஷ் மோடி சுப்ரீம் கோர்டில் கேவியட் மனு
ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்த பூர்னேஷ் மோடி சுப்ரீம் கோர்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.;
டெல்லி,
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் எம்.எல் .எ பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதனால் அவர் மக்களவை எம்.பி. பதவியை இழந்தார். அதனை எதிர்த்து அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரி சூரத் செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவருக்கு ஜாமீன் மட்டுமே வழங்கி தீர்ப்புக்கு தடை விதிக்க மறுக்கபட்டது. இதனை அடுத்து குஜராத் ஐகோர்ட்டை ராகுல் காந்தி நாடினார். கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடைகால விடுமுறைக்குப்பின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் குஜராத் ஐகோர்ட்டு கடந்த 7-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் ராகுல் காந்தி மீது 10-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளதால் சூரத் கோர்ட்டு வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு சரியானதுதான் என்று அந்த தீர்ப்பில் ஐகோர்ட்டு தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தது.
இதனால் ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தங்களது தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது எனக்கூறப்பட்டு உள்ளது.