குடகிற்கு ஜி.எஸ்.டி. செலுத்தியிருந்தால் கேரள செங்கலுக்கு அனுமதி

ஜி.எஸ்.டி. மற்றும் எடை ரசீது இருந்தால் கேரள மாநில செங்கலுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக ஏ.எஸ்.பொன்னண்ணா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.;

Update:2023-08-31 00:15 IST

குடகு :-

கேரள செங்கல்

கேரள மாநிலத்தில் இருந்து குடகு மாவட்டத்திற்கு விதிமுறையை மீறி செங்கல் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதாவது ஜி.எஸ்.டி. மற்றும் செங்கல் எடைக்கான ரசீது இல்லாமல் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாவட்ட நிர்வாகம் அந்த செங்கலை குடகு மாவட்டத்திற்குள் கொண்டு வருவதற்கு தடைவிதித்தது. இதையடுத்து கேரளா-கர்நாடகா எல்லைக்குட்பட்ட பகுதியில் மாகுட்டா, கரிகே கிராமத்தில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது.

அந்த சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்பு அனுப்பி வைக்கப்பட்டது. குறிப்பாக கேரள செங்கல் ஏற்றி வந்த லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கேரள செங்கல் வியாபாரம் பாதிக்கப்பட்டதுடன், குடகில் உள்ள மக்கள் வீடு கட்ட முடியாமல் பணிகளை பாதியிலேயே நிறுத்தி வைத்தனர்.

மாவட்ட நிர்வாகம் அனுமதி

இந்தநிலையில் பொதுமக்கள் மற்றும் கேரள செங்கல் வியாபாரிகள் தரப்பில் குடகு மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கேரள செங்கலை அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற மாவட்ட நிர்வாகம் செங்கலுக்கான ஜி.எஸ்.டி. , செங்கல் எடை தொடர்பான ரசீது வைத்திருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் இதுகுறித்து விராஜ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எஸ். பொன்னண்ணா நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

கேரள செங்கலுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் செங்கல் எடை தொடர்பான ரசீது இருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. செலுத்தாத மற்றும் எடை ரசீது இல்லாத செங்கலுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு பொது மக்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் குறைந்த விலைக்கு செங்கல் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

நிலங்கள் ஆய்வு

குடகில் உள்ள 5 தாலுகாக்களில் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் வருவாய் துறையின் கீழ் உள்ளது. இந்த நிலங்களை ஆக்கிரமித்திருப்பவர்களிடம் இருந்து சரியான வரியை வசூல் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சில கிராமங்களில் வருவாய்துறை நிலங்களை மீட்கவேண்டியுள்ளது. இதற்காக அனைத்து கிராமத்திலும் உள்ள வருவாய்துறை நிலங்களையும் ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஆய்வு பணிகள் முடிந்த பின்பு வருவாய் நிலங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்