கொரோனா மருந்துகளை போதுமான அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும்; மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா மருந்துகள் உள்ளிட்ட அனைத்து மருந்துகளையும் போதுமான அளவு கையிருப்பு வைப்பதை உறுதிசெய்யுமாறு மருந்து நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.;

Update:2022-12-30 02:38 IST

மத்திய அரசு ஆலோசனை

சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் நமது நாட்டில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக பிரதமர் மோடியும், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவும் உயர் மட்ட கூட்டங்களை கூட்டி ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த நிலையில் மருந்து நிறுவனங்களுடன் மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது.

மருந்து நிறுவனங்கள் பற்றி ஆய்வு

மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் காணொலிக்காட்சி வழியாக நடந்த இந்த கூட்டத்தில் மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தற்போதைய நிலைமை, கொரோனா தொற்று மேலாண்மை மருந்துகள் இருப்பு, மருந்து நிறுவனங்களின் உற்பத்தி திறன் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா ஆராய்ந்தார்.

கொரோனா தொற்றின்போது மருந்து நிறுவனங்களின் விலை மதிப்பிட முடியாத பங்களிப்பை அவர் பாராட்டினார். இந்தியாவில் இருந்து அப்போது 150 நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா மருந்துகள் கையிருப்பு

உலகளாவிய வினியோக சங்கிலியை மருந்து நிறுவனங்கள் கண்காணித்து வரவேண்டும், மருந்துகள் உற்பத்தி, கொரோனா மேலாண்மைக்குரிய மருந்துகள் உள்பட அனைத்து மருந்துகளின் கையிருப்பை கவனித்து வர வேண்டும், போதுமான அளவுக்கு அவற்றை கையிருப்பில் வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தங்களால் கொரோனா மேலாண்மை மருந்துகள் வினியோக சங்கிலியை சரியாக நிர்வகிக்க முடியும் என மருந்து நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்தன.

ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல வாழ்வு மையங்கள்

மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் நாட்டில் 1.5 லட்சம் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் தொடங்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இலக்கை மத்திய அரசு அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்