மரத்தில் அரசு பஸ் மோதல்; 30 பயணிகள் காயம்
மரத்தில் அரசு பஸ் மோதிய விபத்தில் 30 பயணிகள் காயமடைந்தனர்.
சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஓரநாடுவில் இருந்து சிக்கமகளூரு நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆல்தூர் அருகே தோரணமாவு பகுதியில் சென்றபோது அரசு பஸ் டிரைவர், ஒரு மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் தறிகெட்டு ஓடியது.
பின்னர் அரசு பஸ், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆல்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.