ஜி20 மாநாடு - நவம்பரில் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி சந்திப்பு

நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Update: 2022-10-26 13:27 GMT

புதுடெல்லி,

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களின் பலத்த ஆதரவுடன் ரிஷி சுனக் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். 200 ஆண்டுகளில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, இளம் பிரதமர் என்ற பெருமையுடன் இந்த பதவியை அலங்கரிக்கிறார்.

அரசர் மூன்றாம் சார்லஸ் முறைப்படி புதிய கன்சர்வேடிவ் தலைவராக ரிஷி சுனக்கை நியமித்த பின்பு, அந்நிகழ்ச்சியில், சுனக்கிற்கு நல்லெண்ண அடிப்படையில் தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்துக்களால் 5 நாட்கள் கொண்டாடப்படும் ஒளியின் திருவிழா எனப்படும் தீபாவளி பண்டிகையையொட்டி ரிஷி சுனக்கின் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தின் பிரதமர் நாற்காலியை அலங்கரித்திருப்பதற்கு உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான உறவு மேலும் வலுப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

இந்த சூழலில், இங்கிலாந்தின் புதிய பிரதமரான ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் சந்திக்கவுள்ளார். இந்தோனேஷியாவின் பாலி தீவில் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அப்போது இருவருக்கு இடையிலான முதல் சந்திப்பு நடைபெறும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்