சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு ஜி20 உறுப்பு நாடுகள் வாழ்த்து

சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காக இந்தியாவிற்கு ஜி20 உறுப்பு நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

Update: 2023-09-09 12:23 GMT

பெங்களூரு,

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் 'சந்திரயான்-3' விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த 'விக்ரம்' லேண்டர் ஆகஸ்ட் 23-ந்தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் 14 நாட்கள் அதன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

தற்போது ரோவர் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிறுத்தப்பட்டுள்ளது. ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது. லேண்டரும், ரோவரும் செப்டம்பர் 22-ந்தேதி செயல்பட தொடங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில், சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காக இந்தியாவிற்கு ஜி20 உறுப்பு நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன. இந்த ஜி20 மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு ஜி20 உறுப்பு நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்