வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
தடுக்க முயன்ற பெண்ணின் கணவரையும் அந்த கும்பல் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.;
ராஞ்சி,
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியினர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதற்காக இருசக்கர வாகனத்தில் ஜார்கண்ட் வந்த அவர்கள், அதன் பின்னர் நேபாளம் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
தலைநகர் ராஞ்சியில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள ஹன்ஸ்திஹா காவல் நிலையப் பகுதியில் இரவு நேரத்தை கழிக்க நினைத்த அவர்கள், இதற்காக அப்பகுதியில் ஒரு தற்காலிக கூடாரம் அமைத்து தங்கினர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல், வெளிநாட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற பெண்ணின் கணவரையும் அவர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் தும்கா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதுடன், எஞ்சியவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.