இன்று இந்தியா வருகிறார் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா
உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா இன்று இந்தியா வர உள்ளார்.
புதுடெல்லி,
உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா, 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். உக்ரைனுக்கு எதிராக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவரது இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், வெளியுறவுத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகியையும், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரியையும் எமின் தபரோவா சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை உக்ரைனுக்கு வருமாறு எமின் தபரோவா அழைப்பு விடுப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ரஷியா நடத்தி வரும் தாக்குதலால் உக்ரைன் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் தவறான நடவடிக்கைகள் குறித்தும் இந்திய ஊடகங்கள் மற்றும் சிந்தனையாளர்களிடம் எடுத்துரைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் உக்ரைனுக்கான ஆதரவை அவர் திரட்ட முயற்சிப்பார் என்றும் கூறப்படுகிறது.