மைசூரு அரண்மனையை சுற்றி பார்த்த வெளிநாட்டு ஜி20 நாடுகள் பிரதிநிதிகள்

ஜி20 நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த மைசூரு அரண்மனையை வெளிநாட்டு பிரதிநிதிகள் சுற்றி பார்த்தனர். அவர்கள் கட்டிட கலையை கண்டு வியந்து போயினர்.

Update: 2023-08-01 22:02 GMT

மைசூரு:-

ஜி20 நாடுகள் கூட்டம்

ஜி20 நாடுகள் சபைக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இதையொட்டி ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது. இதில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த உச்சி மாநாட்டையொட்டி பல்வேறு மட்டத்திலான கூட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஏற்கனவே கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நிதித்துறை தொடர்பான கூட்டமும், கலாசார செயல் கூட்டம் கலாசார நகரமான ஹம்பியிலும் நடந்தது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஜி20 நாடுகள் பிரதிநிதிகளின் 3-வது கூட்டம் மைசூருவில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் நாளை (வியாழக்கிழமை) வரை 4 நாட்கள் நடக்கிறது.

மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடந்து வருகிறது. முதல்நாள் கூட்டத்தில் மைசூரு மண்டலத்தின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் நுண்ணிய பொருளாதாரம், நிலையான வளர்ச்சி, வணிகம், பெண்கள் வளர்ச்சி, டிஜிட்டல் வளர்ச்சி உள்ளிட்டவை பற்றி பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர்.

அரண்மனையை பார்த்து ரசித்தனர்

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று அந்த நட்சத்திர ஓட்டலில் கூட்டம் நடந்தது. இதில் 20 நாடுகளை சேர்ந்த 250 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தையொட்டி மைசூரு நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று கூட்டம் முடிந்ததும் மாலை 4.45 மணி அளவில் வெளிநாட்டு பிரதிநிதிகள் மைசூரு அரண்மனைக்கு வந்தனர். அவர்களை அரண்மனை மண்டலி இயக்குனர் சுப்பிரமணியா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர், வெளிநாட்டு பிரதிநிதிகள் அரண்மனையை சுற்றி பார்த்தனர். அவர்கள் அரண்மனையின் அழகை பார்த்தும், கட்டிட கலையை பார்த்தும் வியந்து போயினர். சுமார் 2 மணி நேரம் அவர்கள் அரண்மனையை சுற்றி பார்த்தனர்.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) வெளிநாட்டு பிரதிநிதிகள் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு சென்று அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட உள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகையையொட்டி மைசூரு அரண்மனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவு இன்று வரை நீடிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்