உத்தர பிரதேசத்தில் உணவின் தரம் குறித்து குறை கூறிய காவலருக்கு கட்டாய பணி விடுப்பு

தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி பணியை விட்டு அனுப்ப திட்டமிடுகின்றனர் என்று காவலர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-14 15:43 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவலர் மனோஜ் குமார் என்பவர், காவல்துறையினருக்கு வழங்கப்படும் உணவு மிக மோசமாக இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். தங்களுக்கு வழங்கப்படும் உணவை விலங்குகள் கூட சாப்பிட முடியாது என்று கூறி அவர் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி உத்தரவிட்டார். உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய வட்ட அதிகாரி அபிஷேக் ஸ்ரீவஸ்தவாவிடம் கேட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், உணவின் தரம் குறித்து குறைகூறிய உத்திர பிரதேசத்தை சேர்ந்த காவலர் மனோஜுக்கு நீண்ட நாட்களுக்கு கட்டாய பணி விடுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசிய காவலர் மனோஜ், தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி பணியை விட்டு அனுப்ப உயர் அதிகாரிகள் திட்டமிடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

அவரது வீடியோ வைரலாக பரவிய பிறகு அவரை தனி அறையில் அடைத்து வைத்ததாகவும், அவரது செல்போனை பறித்து அதில் இருந்த அனைத்து தகவல்களையும் அழித்து விட்டனர் என்றும் கூறியுள்ளார். அத்துடன் தான் சொன்ன வார்த்தைகளில் உறுதியாக இருப்பதாகவும், எத்தகையை விசாரணைக்கும் தயாராக இருப்பாதாகவும் காவலர் மனோஜ் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்