பெங்களூருவில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

பெங்களூருவில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-12-10 22:03 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவின் பெயருக்கு தலைகுனிவு

கர்நாடக தலைநகர் பெங்களூரு இன்று உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு காரணம் பெங்களூருவில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள் தான். குறிப்பாக பெங்களூரு நகரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்கொண்டு உள்ளன. அந்த நிறுவனங்களில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் வேலை செய்து வருகின்றனர்.

பெங்களூரு நகரில் தற்போது மக்கள் தொகை 1½ கோடியை தாண்டி விட்டது. வாகன எண்ணிக்கையும் 1 கோடியாக உள்ளது. பெங்களூருவை பற்றி பெருமையாக பேச பல்வேறு விஷயங்கள் இருந்தாலும், சில குறைகளும் இருக்கிறது. உதாரணமாக சாலை பள்ளங்கள், குப்பைகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சில காரணங்களால் பெங்களூருவில் பெயருக்கு தலைகுனிவும் ஏற்பட்டு உள்ளது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது...

மேலும் அதிக குற்றச்சம்பவங்களும் பெங்களூருவில் நடந்து வருகின்றன. சாலை பள்ளங்கள், போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல நடைபாதை பிரச்சினையும் மக்களுக்கு கடும் தலைவலியாக மாறி உள்ளது. அதாவது பெங்களூரு நகரில் பெரும்பாலான இடங்களில் நடைபாதைகள் சரியாக இல்லை.

நடைபாதைகள் உடைந்தும், சரியாக பராமரிக்கப்படாமலும் உள்ளது. நடைபாதை சரியாக உள்ள இடங்களிலும் பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்த முடிவது இல்லை. இதற்கு காரணம் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் தான். பெங்களூரு நகரில் பெரும்பாலான கடைகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து தங்களது பொருட்களை வெளியே வைத்து உள்ளன.

விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

உதாரணத்திற்கு ஓட்டல்கள் முன்பு உள்ள நடைபாதைகளில் வாடிக்கையாளர்கள் நின்று கொண்டு சாப்பிடும் வகையில் டேபிள்கள் போடப்பட்டு உள்ளன. மரச்சாமான் விற்பனை செய்யும் கடைகள் மேஜைகள், நாற்காலிகளை வெளியே வைத்து உள்ளன. இதுதவிர நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள், துணி கடைகள் உள்பட ஏராளமான கடைகள் வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் நடைபாதைகள் பாதசாரிகள் நடப்பதற்காகவா? அல்லது கடைகள் வைப்பதற்காகவா? என்று சந்தேகம் எழும் நிலை உள்ளது. நடைபாதைகளை கடைகள் ஆக்கிரமித்து இருப்பதால் நடைபாதைகளை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகளில் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்லும் போது விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. இல்லாவிட்டால் பாதசாரிகள், வாகன ஓட்டிகளிடம் திட்டு வாங்கியும் செல்கின்றனர்.

முழுமையாக அகற்ற...

இதனால் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும் கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதசாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் களத்தில் இறங்கிய மாநகராட்சி அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்து இருந்தனர். ஆனால் அதே இடத்தில் மீண்டும் நடைபாதை கடைகள் முளைத்தது தான் பெரிய கொடுமை. பெங்களூருவில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் முழுமையாக அகற்ற வேண்டும் என்று பாதசாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து பாதசாரிகள், நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

அரசியல் பிரமுகர்களின் அழுத்தம்

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் வசித்து வரும் பாஸ்கர், 'நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு இருப்பதாலும், கடைகளில் வைக்க முடியாத பொருட்களை நடைபாதையில் வைத்திருப்பதாலும் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நடைபாதைகளில் வாகனங்களையும் நிறுத்தி செல்கின்றனர். பாதசாரிகள் சாலையில் நடப்பதால் வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினையை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்'.

காட்டன்பேட்டையில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் ஸ்டாலின் கூறுகையில், 'காட்டன்பேட்டை, ராயபுரம், சிர்சி சர்க்கிள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கடைகளின் உரிமையாளர்கள் நடைபாதைகளை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்து உள்ளேன். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் தாங்களால் இந்த பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறுகின்றனர். நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினாலும் அரசியல் பிரமுகர்களிடம் இருந்து தங்களுக்கு அழுத்தம் வருவதாக கூறுகின்றனர். இதனால் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் போது மாநகராட்சி அதிகாரிகளுக்கு எந்த அழுத்தமும் கொடுக்க கூடாது. இந்த விஷயத்தில் அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்' என்றார்.

எங்கே நடந்து செல்வது...

ராஜாஜிநகரில் வசித்து வரும் அண்ணாதுரை கூறுகையில், 'நடைபாதையில் உணவகம் நடத்தி வருபவர்கள் பற்றி எதுவும் கூற முடியாது. அவர்கள் பிழைப்புக்காக நடைபாதையில் உணவகம் நடத்தி வருகின்றனர். ஆனால் சில பெரிய கடைக்காரர்கள் தங்களது கடைகளில் உள்ள பொருட்களை நடைபாதையை ஆக்கிரமித்து வைத்து உள்ளனர். என்னை பொறுத்தவரை நடைபாதையை ஆக்கிரமிப்பது பெரிய தவறு தான். நடைபாதையை கடைகள் ஆக்கிரமித்து விட்டால் பாதசாரிகள் எங்கு நடந்து செல்வார்கள்?. இதை போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்து நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என்றார்.

மைசூரு ரோட்டில் நடைபாதையில் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வரும் ராக்கம்மா கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளாக நடைபாதையில் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருகிறேன். ஆனால் யாருக்கும் தொந்தரவு ஏற்படும் வகையில் கடை நடத்தவில்லை. கடையை வாடகைக்கு எடுத்து நடத்த என்னிடம் போதிய வருமானம் இல்லை. இதனால் தான் நடைபாதையில் உணவகம் நடத்தி வருகிறேன். குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கடை வழங்கினால் அந்த கடையில் வைத்து உணவகம் நடத்த தயாராக உள்ளேன். எனக்கு உதவ அதிகாரிகள் முன்வர வேண்டும்' என்றார்.

பல பிரச்சினைகளை சந்திக்கிறோம்

ராஜாஜிநகரில் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வரும் இன்னொருவர் கூறுகையில், 'கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தள்ளுவண்டியில் உணவகம் வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். நடைபாதையில் உணவகம் நடத்தி வருவது எளிதானது இல்லை. பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளது. தினமும் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து வருகிறார்கள். அவர்களுக்கு பணம், உணவு கொடுக்க வேண்டி உள்ளது. அப்படி கொடுத்தால் தான் வியாபாரம் நடத்த விடுகின்றனர். இல்லாவிட்டால் வியாபாரம் நடத்த விடாமல் தொந்தரவு தருகிறார்கள்' என்றார்.

பெங்களூரு மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்யும் ரமேஷ் கூறுகையில், "பெங்களூருவில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளால் பாதசாரிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாக எங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. நடைபாதையை ஆக்கிரமிக்க கூடாது என்று கடைக்காரர்களுக்கு உத்தரவிட்டு உள்ளோம். ஆனாலும் எங்கள் உத்தரவை கடைக்காரர்கள் காற்றில் பறக்க விடுகின்றனர். நடைபாதையை ஆக்கிரமிக்கும் கடைக்காரர்களுக்கு முதல் முறை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் நடைபாதையை ஆக்கிரமிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. சில அரசியல் பிரமுகர்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவும், நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்